மனோகர் லால் கட்டார் அரியானாவின் முதல்வரானார்






அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் மனோகர் லால் கட்டார் அம்மாநிலத்தின் 10வது முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற கட்சிகளில் பா.ஜ.க 47 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. இதனை அடுத்து அந்த கட்சியின் மனோகர் லால் கட்டார் முதல்வராக பொறுப்பேற்கும்படி வென்ற எம்.எல்.ஏக்களாலும் அக்கட்சியினாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

கர்னால் தொகுதியில் போட்டியிட்ட மனோகர் லால் கட்டார் தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேச்சை வேட்பாளர் ஜெய்பிரகாஷ்  குப்தாவை விட 63,773 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அரியானாவில் பா.ஜ.க முதல் முறையாக ஆட்சி அமைப்பதால் அக்கட்சி பதவி ஏற்கும் விழாவைச் சிறப்பாக கொண்டாட விரும்பியது. இதனால் அம்மாநிலத்தின் பஞ்சகுலத்தின் ஹூடா மைதானத்தில் பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்டது பதவியேற்பு விழா.

தனது டுவிட்டரில் மனோகர் லால் கட்டார் கூறுகையில், எங்களது அரசு நிச்சயம் வெளிப்படையான, பாரபட்சம் இல்லாத, ஊழல் இல்லாத அரசாக திகழும். நாங்கள் அரியானாவை வளர்ச்சியின் உச்சத்திற்கு இட்டு செல்வோம் என்றும் உறுதி அளித்திருந்தார்.

 விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜ மூத்த தலைவர் அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, வி.கே.சிங், சுஷ்மா சுவராஜ் மேலும் பாஜவின் மாநில முதல்வர்களான வசுந்தரா, சிவராஜ் சிங் சவுகான், ஆனந்திபென் படேல், ராமன்சிங், மனோகர் பரிக்கர், பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் முதல்வர் புபேந்திர் சிங் ஹூடா, பாஜ தலைவர்கள் அமித்ஷா, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment