“1856-ல் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று, பெருங்கவிஞன் டென்னிசனின் கவிதைகள் வெளியாயின. மற்றொன்றைக் கூறவிடாமல் தன்னடக்கம் தடுக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். மற்றொன்று நான் பிறந்தது.” என்று துணிச்சலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த நாடக ஆசிரியரான இந்த சிந்தனைவாதி. 

     எதையும் நகைச்சுவையாகவும் இலக்கிய நயத்துடனும் வெளிப்படுத்தும் இயல்புடைய அவர், இளம் பருவத்தில் பள்ளி படிப்புக்கு ஏற்புடையவர் அல்ல என்று நிராகரிக்கப்பட்டவர். அதன் பிறகு வேலைக்குச் சென்றார். ஆனால் சுதந்திர மனப்பான்மை கொண்ட இவரால் இன்னொருவரின் கீழ் வேலை செய்ய விருப்பமற்று போக நான் எழுதுகிறேன் என்று நாவல் எழுத உட்கார்ந்தார். 

      நாவல் செல்லுபடியாகதமையால் நாடகம் எழுத ஆரம்பித்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து மொத்தம் 58 நாடகங்கள் எழுதிய அந்த நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி, இறக்கும் வரை மதுவுக்கும் சிகரெட்டுக்கும் தன்னை அனுமதித்தது இல்லை. சைவ பிரியரும் கூட. 

     1925-ல் நோபல் ஃப்பௌண்டேசன் பரிசளித்த போது ஏற்க மறுத்தவர், “நீரில் மூழ்கியவன் மூச்சுத்திணறி கரை ஏறிய பிறகு, அவனுக்குப் பாதுகாப்பு பெல்ட்டை எறிகிற மாதிரி தான் இந்த பணம்” என்றதுடன் அந்த பணத்தை இலக்கிய வளர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் அளித்தார். 93 வது பிறந்த நாளின் போது “மரணம் என்னை அழைக்கிறது. அதை நான் வெறுக்கவில்லை” என்றவர் தன்னுடைய 95 வது அகவையில் மரணமடைந்தார். 

     இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் விருது (1938)  ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. அவர் இவ்விருதுகளை முறையே இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புக்காகவும் பிக்மேலியன் என்னும் திரைப்படத்தின் பணிக்காகவும் பெற்றார்.
     
     "மக்களுக்கு இப்பொழுது உள்ளதைக் காட்டிலும் அதிகப்படியான நாட்டுப்பற்று தேவையில்லை. அதிகப்படியான கலை தேவையில்லை. ஆனால் இப்பொழுது உள்ளதை விட அதிகப்படியான பணம் தேவை" என்று தற்கால மனிதனின் வாழ்க்கையைப் பற்றி எள்ளி நகையாடியவர் ஜார்ஜ் பெர்னாட் ஷா! 


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment