என் தமிழிசைச்
சுமந்து வரும்
தென்றலினையும்
மண்த்தாய் ஊட்டிய
தேனினையும்
உறிஞ்சி உசிரு
பிடித்து
எழுந்து நின்ற
எம்மரமே!
பசும்பொன்
நிறத்தில்
பவளமாய் மின்னிய
நீ
நீண்ட நாள்
புதையுண்ட
கரி போலான கதை
கூறு!
காலையிலும்
மாலையிலும்
இழைப்பாற வந்தமரும்
பறவைக்கூட்டங்கள்
எங்கே?
அன்னையவள்,
துயிலிருக்கும்
என்னை,
தூரியொன்று கட்டி
ஆட்டிய அக்கிளை
எங்கே?
உளமாற
நானுறங்கும்
வேளையிலே
தேனூறும்
ஒலியெழுப்பும்
உன் இலை தழைகள்
எங்கே?
அனாதை மரத்திற்கு
ஆறுதலான
எங்கள் சிறுவர்
கூட்டமொன்று
குரங்குச்
சேட்டைச் செய்த
திடலாகி, இன்றோ
வாழ்விழந்து
நிற்கிறாயே!
வானோக்கி வளர்ந்த
மரம்,
அன்று பெய்த பேய்
மழையில்
காத்திருந்த
கள்வனான
இடிப்பேய்
பிடித்தாட
கொட்டும்
மழையிலும்
கொழுந்து
விட்டெரிந்து போனதாம்.
ஊர் மக்கள்
உச்சரித்த போது
எச்சரிக்க
நினைத்த மனதில்
“அன்று மட்டும்
அர்ஜுனனாய்
நானிருந்தால்
விழுந்த, அந்த
இடியினை
கக்கத்தில்
இறுக்கியிருப்பேன்.”
உள்ளம் கணக்க
நீண்ட நினைவில்
வாழ்வோடு
வந்த மரத்திற்கு
மறைவஞ்சலி
செலுத்தி நடந்தேன்.
- ரசிகன்
0 comments :
Post a Comment