செப்டம்பர் 23, இந்திய வரலாற்றில் மிக
முக்கியமாக குறிக்கப்பட்டுள்ள ஒரு தினம். குறிப்பாக வளர்ந்து வரும் விண்வெளியில்
இந்தியா நிகழ்த்தியுள்ள இந்த சாதனை ஆள நினைக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு விடும்
சவாலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பழமையான செய்திகளை வாசிக்கும் போது
ஒருவித ஏக்கம் இயல்பாக என்னுள் வந்து போகும். காரணம், இதுபோலொரு சாதனையை இந்த
மண்ணில் யாரும் செய்யவில்லையே என்பதே. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டு
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட மங்களயான் தான் அந்தச் சாதனை.
அமெரிக்கா,
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் மட்டும் நிகழ்த்திய இந்த சாதனையின் பட்டியலில்
இந்தியா இடம் பிடித்துள்ளது இந்த ஆண்டு (2014). நவம்பர் மாதம் 5 ம் நாள் 2013 ல்
செவ்வாய் கிரகத்தை நோக்கி ஒரு விண்கலம் ஏவப்பட்டது. அது இந்திய செயற்கை கோள்களைச்
சுமந்து செல்லும் PSLV என்னும்
ராக்கெட்டில் தான் அனுப்பப்பட்டது. மங்களயான் என்று பெயரிடப்பட்ட செயற்கை கோள் 454
கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கை
கோள் என்றும் முதல் முயற்சியிலே வென்ற முதல் நாடு என்றும் வரிசை படுத்தப்படுகிறது
சாதனைகளின் பட்டியலின் இந்த அறிய முயற்சி. சுமார் 323 நாட்களில் 67,000 கோடி கிலோ
மீட்டர்கள் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைய பயணித்தது மங்களயான். மகத்தானதொரு
பயணம் மங்களகரமாக முடுவுற்றதில் கிடைத்த என் உள்ளப்பூரிப்பைப் பகிர்ந்து கொள்ள
ஆசைப்பட்டு விசாரித்ததில் யாவருக்கும் வெறும் செய்தியாக கூட அறியப்படாது போனதோ
என்ற ஐயத்தினை வெளிப்படுத்தியது எனக்குள்.
நாள்தோறும்
தினசரிகளில் வாசித்த செய்தியொன்று நிஜமாக கண் முன்னே நிகழ்வதை தொலைக்காட்சியில்
தரிசித்தப்படி இருந்தேன். செவ்வாய் கிரகம் பற்றி அறிந்த தகவல் பகிரப்பட்டன உடன்
நடப்பு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன தவறாத விளம்பர இடைவேளைக்களுக்கிடையே கிடைத்த
நிமிடங்களில். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி, அறிவியல்
எழுத்தாளர் மற்றும் தொகுப்பாளார்களின் உரையாடல்களில் வெளிப்பட்ட தேவை, நிர்பந்தம்
மற்றும் அத்தியாவசியம் யாவும் செவிவாயிலாக அறிந்தபடி எதிர்பார்ப்புடன்
காத்திருந்தேன் காலை 7.15 மணிக்கு. இன்னும் இரண்டு நிமிடங்களில் ஏறத்தாழ ஆறு
மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த அப்போகி என்னும் இயந்திரம் இயக்கப்படும் என்ற
அறிவிப்புக்குப்பின் எதிர்பார்ப்பு அதிகப்படுத்தப்பட்டது என்னுள் இயற்கையாக.
அப்போகி இயந்திரத்தின் வேலை, பயணிக்கும் செயற்கை கோளின் வேகத்தை அதிகரிக்க மற்றும்
குறைக்க பயன்படுத்துவதே. புவி ஈர்ப்பு விசையொத்த விசையொன்று செவ்வாய் கிரகத்திலும்
உண்டு. அந்த விசையில் செயற்கை கோள் சிக்கினால் தான் செவ்வாயின் குறைந்த பட்ச
தொலைவான 206 மி.கி.மீயும் அதிகபட்ச தொலைவான 249 மி.கி.மீயும் உள்ளடக்கிய
சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும், ஈர்ப்பு விதியின் படி. ஆனால் மணிக்கு 80,000
கி.மீ வேகத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்காய் பயணித்த மங்களயானை அங்கு நிலை
நிறுத்தல் என்பது சாத்தியமில்லா ஒன்று தான். ஆகவே தான் வேகம் குறைக்க வேண்டிய
அத்தியாவசியம் புரியுமென நினைக்கின்றேன். மங்கள்யான் தனது பயணத்தில் 98% பூர்த்தி
செய்திருந்த நேற்று(23.9. 14) முதல்
இன்று(24.09.14) காலை 7.17 வரை நொடிக்கு 22.2 கி.மீ வேகத்தில் பயணித்தது. அதன்
பின்னர் அப்போகி இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள எட்டு சிறிய இயந்திரங்களும்
இயக்கப்பட்டு நொடிக்கு 4.4 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டு சுற்றுவட்டப் பாதையில்
நிலை நிறுத்தப்பட்டது. இயந்திர வேகம் குறைக்க மங்கள்யான் செல்லும் திசைக்கு எதிர்
திசையில் திருப்பப்பட்டு சாத்தியப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ரோவர் விண்கலம்
செவ்வாயில் தரையிறக்கப்பட்டபோது குதித்து மேலெலும்புமாறு தொழில் நுட்பம்
பயன்படுத்துப்பட்டு சாத்தியபடுமா என்ற அச்சத்தினை ஏற்படுத்தியது போன்றே இந்த வேக
குறைப்பு அசாத்தியமாக தோன்றச் செய்து இறுதியாக வழிக்கு வந்தது.
மங்கள்யான்
கட்டமைப்பினைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பிய நான் வாசித்தது, தமிழகத்தில் பிறந்த
சாதனையாளராகவும் மங்கள்யான் திட்டத்தில் முக்கிய பங்குவகித்த மயில்சாமி அண்ணாதுரை
அவர்கள் தினத்தந்தியில் கடந்த 47 வாரங்களாய் எழுதி வரும் ‘செவ்வாய் அருகே சிறகை
விரிக்கும் மங்கள்யான்’ என்ற தொடர் தான். மங்கள்யானில் பயன்படுத்தப்பட்ட கருவிகள்,
செயல்பாடுகள் மற்றும் அவற்றை பயன்பாடுகள் யாவினையும் விரிவாக விளக்கமாக
எழுதுகிறார். விஞ்ஞான துறையின்
வரலாற்றையும் அலசிப்போகும் இந்த தொடர் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான
அறிவுரைகளுடன் பயணித்துக்கொண்டுருக்கிறது.
இதுவரை
என்று அறிய ஆயத்தப்படும் ஒரு தேடலில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் 52 முறை
செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கச் செய்த செயற்கை கோளில் 21 மட்டும் இலக்கை
எட்டியது என்பது ஆச்சாரியமான ஒரு உண்மை தான். அதாவது 40% மட்டும் வெற்றி
பெற்றுள்ளது. அண்டை நாடான சீனா ஏவிய செயற்கை கோள் பசுபிக் பெருங்கடலில்
விழுந்துவிட்டது, ஜப்பானின் முயற்சிகூட தோல்வியைத் தழுவியது உண்மையே. அமெரிக்கா,
ரஷ்யா கூட பல முயற்சிக்கு பின்னரே தன்னை நிரூபித்துக் கொண்டது. இந்தியாவின் இந்த
சாதனை ஒரு விதத்தில் மற்ற நாடுகளை ஆச்சரியப்படுத்தியதோ இல்லையோ துரித
படுத்திருக்கும் இந்த துறையில் சாதனைகளை நிகழ்த்திட.
வறுமை,
வளர்ச்சியடையாத பொருளாதாரம், முன்னேற்றத்திற்கு சாதகமற்ற சூழ்நிலை நிலவும் இந்த
நிலையில் 454 கோடி செலவில் மனிதனோ அல்லது வேறு ஏதேனும் உயிரினமோ வசிக்காத அல்லது
வசிப்பதற்கான சாத்தியபாடு குறைவாக உள்ள செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப வேண்டிய
அவசியம் என்ன? என்ற இயல்பான கேள்வியாளர்க்கு என்ன பதில் சொன்னாலும் திருப்தி
அடையப்போவதில்லை என்று நான் நினைக்கிறேன். இதற்கான பொருத்தமான விடையாக நான்
கருதுவது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
அவர்கள் கூறியதே. அவரின் பதில் பிற்காலத்தில் பல நாடுகளின் கூட்டு முயற்சியில்
செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடும் வேளையில் நாமும் அந்த
கூட்டத்தினருடன் கலந்து கொள்ள ஒரு அங்கீகாரமாக இருக்கும் என்பதாகும்.
அறிவியல்
எழுத்தாளர் ராமதுரை அவர்கள் குறிப்பிடுகையில் இது ஒன்றும் பிரமாண்டமான சாதனை
அன்று. சாதரமான முயற்சி தான் என்றார். சரியானதே என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
மனம். காரணம் அவர் சொல்வது இதைவிட அதிசக்தி வாய்ந்த தொழில் நுட்பங்கள்
பயன்படுத்தப்படுகின்றன (பிற நாட்டு செயற்கை கோள்களில்) மற்றும் அவற்றின்
செயல்பாட்டு கால அளவு ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருக்கிறது என்றும் ஆறு மாதங்களோ
அல்லது ஒரு வருடமோ செயல்படும் இந்த மங்கள்யானால் நாம் பெறப்போவது மிகச் சொற்பமே
என்றார். மிக அதிகமாய் செலவிட்டு தோல்வியுற்றதினால் பெற்ற இழப்பிற்கு இது எவ்வளோ
மகத்தானது மற்றும் மதிப்பானது. செவ்வாய் கிரகத்தின் தரையில் ஊர்ந்தபடி ஆய்வினை
மேற்கொள்ளும் ரோவருடன் ஒப்பிட்டு தன்மதிப்பை ஏன் குறைக்க வேண்டும்? அது
மேற்கொள்ளும் ஆய்வினை போன்றே மங்கள்யானும் ஆய்வு செய்யும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளதே! தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை பயன் படுத்திக்கொள்வதில்
தவறு ஒன்றும் இல்லை. தற்போதைய அறிவியலாளர்கள் நிகழ்த்திய இந்த சாதனை இத்தோடு
முடிவு பெறப்போவதில்லை. இது நிச்சியம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடரும் அப்போது
இது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது தானே! என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும்
பொழுது வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக ஒத்துழைக்கும் மற்றும் களையப்பட்ட
குற்றங்குறைகள் சரிசெய்யப்பட்டு சாதனைக்கான பாதை ஒழுங்குப் படுத்தப்படும்.
முன்னாள்
இஸ்ரோ விஞ்ஞானி சிவ சுப்ரமணியன்
கூறுகையில் குறைந்த செலவிற்கான காரணங்களையும் பட்டியலிட்டார். அவர்
குறிப்பிட்டவைகள் தேவையான கட்டுமானப் பொருள்கள் உள் நாட்டிலே
தயாரிக்கப்பட்டதாலும் வாங்க வேண்டிய
அவசியம் ஏற்படாதமையாலும் அறிவியலாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப
உதவியாளர்க்கு கொடுக்கப்படும் தொகையும் கணிசமானது என்பதாலும் தான் என்றார்.
இதிலிருந்து விளங்கி கொள்வது யாதெனில் மற்ற நாடுகளில் ஆர்வமோ அர்பணிப்போ
அதிகரித்துவிடாமல் பணிக்கு வேலை என்றெ செயல்படுவது புரிகிறது. ஆனால் நமது
அறியலாளர்களிடம் இந்த ஆர்வமும் அர்பணிப்பும் சாதனைகளின் தேவை என்ற புரிதல்
தென்படுகிறது. இது முதல் முயற்சி அதிலும் வெற்றி அடுத்த கட்ட தேவையை மிக முக்கியமாக்கியுள்ளது
என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான பணிகளை செவ்வனே துவக்கிட வேண்டும்.
ஏனெனில் போகும் தூரம் பக்கமில்லை.
இது
போன்ற சாதனைகள் மாணவர்களிடத்தில் கொண்டுச்செல்ல வேண்டும். அப்போது தான் மயில்சாமி
அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் போன்ற சாதனையாளர்களை இப்பிறப்பிலே காண
இயலும். மேலும் இந்த அரிதான சாதனையை சாத்தியமாக்கி எதிர்கால இளைஞர்களின் கவனத்தை
திசைத் திருப்பிட உதவிய சாதனையில் பங்குபெற்ற அனைவரையும் வாழ்த்தி
தலைவணங்குகிறேன்.
- ரசிகன்
0 comments :
Post a Comment